119 துரித அழைப்பு சேவையை அநாவசியமாக பயன்படுத்த வேண்டாம்...!


அன்றாடம் இடம்பெறும் திடீர் விபத்துக்கள்,அனர்த்தங்கள்,பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக காவற்துறையினருக்கு அறிவிப்பதற்கு 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காவல் அவசர அழைப்பு பிரிவு எனப்படும் 119 துரித அழைப்பு சேவையை சிலர் தவறாக பயன்படுத்துவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான ஆய்வினை மேற்கொண்டதன் பின்னர் இந்த நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.

அவசர அழைப்பிற்கு கிடைக்கப்பெறும் அழைப்புகளில் 93 சதவீதமானவை தேவையற்ற விடயங்களுக்காக மேற்கொள்ளப்படும் அழைப்பு என தெரியவந்துள்ளது.இது காவற்துறை அவசர பிரிவினரின் பணிகளுக்கும் இடையூறாக உள்ளது.

எனவே திடீர் விபத்துக்கள்,அனர்த்தங்கள்,பாரிய குற்றச்செயல்கள் என்பன தொடர்பில் அறிவிப்பதற்காக மாத்திரம் 119 அவசர அழைப்பு இலக்கத்தை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் காவற்துறையினர் கோருகின்றனர்.

இவ்விடயங்களைத் தவிர காணி தகராறு,உடன்படிக்கை குளறுபடிகள்,காசோலை மோசடிகள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் 119க்கு  அறிவிப்பதால் எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாது என காவற்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments: