வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக மாவையை நிறுத்த எடுக்கப்பட்ட தீர்மானம் கேலி கூத்தாகும் - அரசாங்க பொது ஊழியர் சங்கம் கண்டனம்

எஸ்.அஷ்ரப்கான்


வருகின்ற வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் எம். பி மாவை சேனாதிராசாவை நிறுத்துவதாக தமிழரசு கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை எஸ். லோகநாதன் தலைமையிலான அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் நேற்று (01) வன்மையாக கண்டித்தது. 

இது தொடர்பாக  இத்தொழிற்சங்கம் விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,

மாவை சேனாதிராசா என்பவர் தமிழ் மக்களுக்கான அரசியலை தலைமை தாங்கி நடத்துவதற்கும், தமிழ் மக்களின் பிரதிநிதியாக செயற்படுவதற்கும் அருகதை அற்றவர். அவற்றுக்கான ஆணையையே கடந்த பொது தேர்தலில் யாழ். மாவட்ட மக்கள் அவருக்கு வழங்கினர். அதாவது அவரை நிராகரித்து விட்டனர்.

அவர் மக்களை நேசிக்கின்ற ஒரு தலைவராக செயற்பட தவறிய காரணத்தாலேயே மண் கவ்வினார். அத்துடன் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு நட்டாற்றில் கை விட்டும் இருந்தார்.

கடந்த பொது தேர்தலில் எமது தொழிற்சங்கம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றிக்காக வட மாகாணம் முழுவதும் சூறாவளி பிரசாரங்கள் மேற்கொண்டது. அப்போது மாவை சேனாதிராசாவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதே யாழ். மாவட்டத்தில் மேடைகள்தோறும் எமது பிரசாரத்தின் அடிநாதமாக அமைந்தது.

அதில் நாம் வெற்றி அடைந்தோம். ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அவரை வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்து இருப்பது எம்மை பொருத்தவரை மிக பெரிய கேலி கூத்து ஆகும். இதை எமது மக்களும் ஏற்று கொள்ளவே மாட்டார்கள். 

No comments: