மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம்


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் நேற்று கல்வியமைச்சில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேல்  மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்காக 907 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு திறக்கப்படவுள்ளதாகவும்,எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள சாதாரண தரப்பரீட்சைக்கு மேல் மாகாணத்திலிருந்து 79 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளதுடன் 1,576 பாடசாலைகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களினால் எதிர்வரும் 28,29 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதி ஆகிய தினங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு தமது பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதன் போது எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதிக்கு முன்னர் கல்வியமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது,

அதன் பின்னர் மேல் மாகாணத்தில்  கொரோனா தொற்று அபாயமற்ற  பகுதிகளில் எதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments: