இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதன்படி தடுப்பூசிகளை கொண்டுவரும் விமானம் இன்று முற்பகல் 11 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு AstraZeneca Covishield தடுப்பூசியினை நாட்டிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசிகளை விமான நிலைய குளிர்சேமிப்பகத்தில் களஞ்சியப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு சீன அரசாங்கம் மூன்று இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசியினை வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அவை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படும் எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் AstraZeneca தடுப்பூசியினை பெற்றுக்கொள்வோரின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த தடுப்பூசியினை ஒரே நாளில் 26 ஒசுசல மருந்தகங்களுக்கு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த தடுப்பூசியை சுகாதார பணியாளர்களினால் முன்னதாக பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் காணப்படும் ஆறு பிரதான வைத்தியசாலைகளின் பணியாளர்களுக்கு முதன் முறையாக இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, வடகொழும்பு போதனா வைத்தியசாலை, கொழும்பு தெற்கு மற்றும் கிழக்கு போதனா வைத்தியசாலைகள், ஹோமாகம வைத்தியசாலை மற்றும் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றின் பணியாளர்களில் 25 வீதமானவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த வைத்தியசாலைகளின் ஒரு தொகுதியினருக்கு நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதுடன் ஏனையவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் வழங்கப்படுமெனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
No comments: