நேற்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் பதிவு- முழு விபரம்


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  297 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு -6 பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆணொருவர் இத்தேபான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கடந்த 26ம் திகதி உயிரிழந்துள்ளார்..

கொவிட் -19 நியூமோனியா நிலை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 73 வயதான ஆணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நியூமோனியா நிலையால் ஏற்பட்ட மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி – கல்லேல்ல பகுதியை சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட்19 நியூமோனியா நிலை,  இதய நோய், குருதி விசமானமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 61 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார். அதன்பின்னர் அவர் முல்லேரியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 27ம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிலையால் இதயம் செயலிழந்தமையே காரணமாகும். 

அதேநேரம், கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 61 வயதான ஆண் கைதியொருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.. கொவிட்19 நியூமோனியா நிலை,மாரடைப்பு, நீரிழிவு அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த 24ம் திகதி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நியூமோனியாவாகும்.

இதேவேளை, எந்தரமுல்ல பகுதியை சேர்ந்த 62 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கடந்த 21ம் திகதி உயிரிழந்தார். கொவிட்19 நியூமோனியா நிலை, சிறுநீரக பாதிப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணம்  என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: