இன்று மீண்டும் திறக்கப்படவுள்ள பேலியகொடை மீன் சந்தை


பேலியகொடை மீன் சந்தை இன்று மீள திறக்கப்படவுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 21ம் திகதி சந்தையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

பேலியகொடை கொத்தணி மூலம் நாட்டின் பல பாகங்களிலும் ஆயிரக்கணக்கானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், கடலுணவு வியாபாரமும் பாரிய வீழ்ச்சியடைந்த நிலையில் மீன் சந்தையில் கொரோனா பரவல் வீரியமடைவதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றை களைவதற்காக கடற்றொழில் அமைச்சரினால் துறைசார் நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

துறைசார் குழுவினரின் பரிந்துரைக்கமைய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சந்தையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுகாதார துறையின் வழிகாட்டல்களின் கீழ், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மொத்த வியாபார நடவடிக்கைகளுக்காக பேலியகொடை மீன் சந்தை இன்று திறக்கப்படவுள்ளது.

வழிகாட்டல்களுக்கு அமைய, முழுமையாக நவீனமயப்படுத்தப்பட்டு மொத்த மற்றும் சில்லறை நடவடிக்கைகளுக்காக சந்தை மீள திறக்கும் வரை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய மொத்த விற்பனைக்காக மாத்திரம் மீன் சந்தை இன்று திறக்கப்படும் என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: