நாட்டில் மிக வேகமாக அதிகரித்துவரும் கொரோனா தொற்று. அதிகரிக்கும் தொற்றாளர்கள்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொவிட்19 நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட கொவிட் இரண்டாம் அலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணுக்கை 27 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 538 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அவர்களில் பேலியகொடை தொத்தணியுடன் தொடர்புடைய 448 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 21 பேரும், அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி , மினுவாங்கொடை, பேலியகொடை, சிறைச்சாலை கொத்தணிகளில் கண்டறியப்பட்ட கொவிட்19 நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 985 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் , வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 69 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறுதியானது.

அவர்களில் தென் சூடானில் இருந்து வந்த 41 பேரும், ஓமானில் இருந்து நாடு திரும்பிய 11 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 10 பேரும், இந்தியா, மாலைத்தீவு மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவரும் நேற்றைய தினம் கொவிட்19 தொற்றுறுதியானவர்களில் அடங்கின்றனர்.

மேலும் நான்கு கடலோடிகளுக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 613 ஆக உயர்வடைந்துள்ளது.

8 ஆயிரத்து 206 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மேலும் 461 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

No comments: