கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு,துப்பாக்கியை பயன்படுத்துவதற்கான அனுமதி உள்ளதாக நீதிமன்ற விசாரணைகளில் உறுதி

க.கிஷாந்தன்


நுவரெலியா - இராகலை - புரூக்சைட் பகுதியில் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு, துப்பாக்கியை பயன்படுத்துவதற்கான அனுமதி உள்ளதாக நீதிமன்ற விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற போதே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

புரூக்சைட் பகுதியில் கடந்த 10ம் திகதி காரொன்றில் பயணித்த மூன்று சந்தேகநபர்களை விசேட அதிரடிபடையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கைது செய்திருந்தனர்.

 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிப் பொருட்கள் காணப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தனர்.

 

எனினும், நீதிமன்ற விசாரணைகளின் போது, சந்தேகநபர்கள் வசம் துப்பாக்கி ரவைகள் மாத்திரமே காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அவ்வாறு சந்தேகநபர்கள் வசமிருந்த துப்பாக்கி ரவைகளுக்கு, பாதுகாப்பு அமைச்சினால் விநியோகிக்கப்படும் அனுமதி பத்திரம் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, சந்தேகநபர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

 

எனினும், பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகள் சந்தேகநபர்களிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை

 

இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி வரை நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

No comments: