கொரோனா தொற்று - நேற்றைய தினம் மூன்று உயிரிழப்புக்கள் பதிவு
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி, களுத்துறை – தர்கா நகர்பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 24ம் திகதி அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இரத்த அழுத்தம், இருதய நோய், இரத்தம் விஷமாதல் உள்ளிட்ட நோய்களுடன் கொரோனா தொற்று ஏற்பட்டமை அவரது உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கண்டி – தெல்தெனிய பகுதியில் 83 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி போதனா வைத்தியசாலையிலிருந்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட் நியூமோனியா நிலைமை, அவரின் உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை தென் பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண்ணொருவர், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 22ம் திகதி அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுடன், இரத்தம் விஷமாகியமை உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 549 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்றுபரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்தவிடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் மற்றும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 41,603 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 520 பேர் குணமடைந்து நேற்றைய தினம் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,221 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8,188 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments: