மட்டக்களப்பில் மூன்று நாட்களுக்கு வர்த்தக நிலையங்கள் மூடப்படும் - மட்டக்களப்பு மாநகர சபை மேஜர்

கனகராசா சரவணன்


மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், கோழிக்கடைகள், பேக்கரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் இன்று வியாழக்கிழமை 31ம் திகதியில் இருந்து  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து  3  தினங்களுக்கு பூட்டப்படும் என மட்டக்களப்பு மாநகர சபை மேஜர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

மாநகரசபையில் இன்று வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் நேற்று முன்தினம் புதன்கிழமை  வர்தத்க நிலைய உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்  26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது 

இதனடிப்படையில் குறித்த வர்தக நிலையங்களுக்கு வந்து சென்றவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் இந்த செயற்பாடு முடியம்வரை வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

எனவே சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்  என மாநகரசபை இன்று எடுத்த தீர்மானத்தின்படி எதிர்வரும் 3 தினங்களுக்கும் தொடர்ந்து வர்த்தக நிலையங்களை மூட முடிவு செய்துள்ளோம்.  இதில் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், கோழிக்கடைகள், பேக்கரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் பூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. 

இந்த அறிவித்தலை மீறுபவர்களுக்கு எதிராக மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழ் கொரோனா சட்டத்தின் கீழும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை குறிப்பாக வியாபார நிலையங்களை திறந்து வியாபாரம் நடாத்துக்கின்ற வியாபாரிகள் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். 

பல கடைகளில் முககவசம் அணியவில்லை மற்றும் இடைவெளி பேணப்படவில்லை, கை கழுவுவதற்கான வசதிகள் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது  எனவே இவற்றை பின்பற்றி நீங்கள் வியாபார செயற்பாட்டை செய்ய வேண்டும் 

அதேவேளை மாநகரசபை பகுதியில் கொரோனா தொற்று வராமல் பாதுகாக்க அனைவரது ஒத்துழைப்பையும் நல்குமாறு  கேட்டுக்கொள்வதுடன் நாளை நடக்கவிருக்கும் புதுவருட  ஆராதனையில் பெரிய தேவாலயங்களில் 50 பேரும் சிறிய தேவாலயங்களில் 25 பேரும்  அனுமதிக்கபடும் என்ற விதிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

No comments: