எமது பிரதேசங்களின் நிலை இதுதானா ? கலையரசன் கேள்வி !


எமது பிரதேசங்கள் தொடர்ந்து முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த பிரதேசங்கள், முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள். அந்தப் பிரதேசங்களைத் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையில் தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுபப்பினர் த.கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இறுதியக இடம் பெற்ற  பாராளுமன்ற தொடரின்போது இடம்பெற்ற நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு, போக்குவரத்து, கூட்டுறவு அமைச்சுகளின் குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய நாட்டைப் பொருத்தமட்டில் நாங்கள் வடக்கு கிழக்கு ப்ரதேசங்களில் நீண்டகாலமாக ஒரு அழிவைச் சந்தித்தவர்கள். தற்போது அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகள் தொடர்பில் பேசப்படுகின்றன. அந்த அடிப்படையில் எமது பிரதேசம் சார்ந்த விடயங்களை இவ்விடத்தில் பேசுவது பொருத்தமாக இருக்கும்.

அந்த அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலே கல்முனை நாவிதன்வெளி என்ற பிரதேச செயலகப் பிரிவுகளை இணைக்கின்ற ஒரு இடமாக கிட்டங்கி என அழைக்கப்படும் தாம்போதி ஒன்று இருக்கின்றது. இது காலத்திற்குக் காலம் மழை பெய்கின்ற போது ஒரு கிலோமீட்டர் வீதி அளவிற்கு ஐந்து அடி உயரத்திற்கு மேல் நீர் எழுவது வழமை. இதன்போது பல உயிரிழப்புகளும் அப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

கல்முனை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. நாவிதன்வெளி பிரதேசம் விளைநிலங்களின் இடமாக இருக்கின்றது. நாவிதன்வெளியில் உள்ள விளைபொருட்களை சந்தைப்படுத்தும் இடமாகக் கல்முனை இருக்கின்றது. அதனடிப்படையில் நாளாந்தம் கல்முனைக்குச் செல்வது மாத்திரமல்ல. நகரப் புறத்தில் இருந்து அதிகளவானவர்கள் அரச உத்தியோகத்தர்களாகவும் இருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் அந்த கிட்டங்கி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ததாக இருக்கின்றது.

இதனை அடிப்படையாக வைத்து இப்பகுதியில் ஒரு பாலம் அமைத்துத் தரப்பட வேண்டும் என நாங்கள் நீண்ட காலமாக முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம். ஆனால் அங்கு ஒரே ஒரு சிறிய பாலம் மாத்திரம் அமைக்கப்பட்;டுள்ளது. இதனால் பெரும் சொல்ல முடியாத துயரங்களை எமது மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அந்த இடத்திற்குப் பொருத்தமானதொரு பாலத்தை அமைத்து அவ்விரு பிரதேசங்களும் இயல்பாக இயங்குவதற்கு இந்த உயரிய சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்த நாட்டிலே ஆயிரம் கிலோமீட்டர் கொங்கிறீற்றுப் பாதைகள் செப்பனிட்ட காலகட்டத்தில் கூட எமது பிரதேசங்களில் அவ்வாறான அபிவிருத்திகள் நடைபெறவில்லை. உண்மையில் அம்பாறை மாவட்டத்தைப் பொருத்தமட்டில் அந்த அந்த அமைச்சுகளில் இருந்த அமைச்சர்கள் அந்த அந்த பிரதேசங்களையே குறிப்பாக அபிவிருத்தி செய்திருக்கின்றாhர்கள்.

குறிப்பாக எமத கிராம பிரதேசங்கள் அந்த அபிவிருத்தியிலே புறந்தள்ளப்பட்டிருக்கிறது. தற்போது எங்களுடைய கௌரவ பிரதமர் பேசுகின்ற போது ஒருலெட்சம் கிலோமீட்டர் காப்பெட் வீதிகள், பத்தாயிரம் வேலைவாய்ப்புகள் என்பன தொடர்பில் கூறியிருந்தார்கள். ஆனால் எமது பிரதேசங்களில் ஒரு வேலைத்திட்டமாவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவ்வாறான நிலைமைகளைக் களைய வேண்டும்.

ஏனெனில் இந்தப் பிரதேசம் தொடராக முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த பிரதேசம், முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட பிரதேசம். அந்தப் பிரதேசத்தினை தொடராக இவ்வாறான நிலைமையில் தானா நீங்கள் வைத்திருக்கப் போகின்றீர்கள். இந்த நிலைமை மாற்ற வேண்டும். அந்த மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உயரிய சபையிலே ஒரு குழுவை அமைத்து எமது பிதேசத்தில் இருக்கும் குறைகளை அறிய வேண்டும்.

நாங்கள் தொடராக இந்த சபையிலே எமது மக்களின் குறைகளைச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. வீதிப் போக்குவரத்து மாத்திரமல்லாமல், ஏனைய அபிவிருத்திகளிலும் எமது மக்கள் பின்தள்ளப்படுகின்றார்கள். ஐ ரோட் திட்டத்திலும் கூட நாங்கள் மாகாணசபையில் இருக்கும் போது கல்முனைப் பிதேசத்தில் பல்வேறு வீதிகளைத் தெரிவு செய்தோம். ஆனால் தற்போது அநேகமான வீதிகள் அந்தத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டவையாகக் காணப்படுகின்றது.

பெரியநீலாவணை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பட்டிமுனை என்று சொல்லப்படுகின்ற எமது பிரதேசங்களின் அபிவிருத்திகள் பெயர்ப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அபிவிருத்திகளே காணாத நிலைமை இருக்கின்றது. திருக்கோவில், ஆலையடிவேம்பு, வீரமுனை போன்ற பிரதேசங்களிலும் இவ்வாறான நிலைமைகளே காணப்படுகின்றன.

குறிப்பாக எமது தமிழ்ப் பிரதேசங்களில் பல கிராமிய வீதிகள் செப்பனிடப்பட வேண்டி இருக்கின்றன. இவ்வாறு உட்கட்டமைப்பு அதிகளவில் தேவைப்படுகின்ற பிரதேசங்களாக எமது பிரதேசங்கள் இருக்கின்றன. இந்த நிலைமை மாற வேண்டும்.

இங்கு ஆளுந்தரப்பில் இருந்து பலர் பேசும் போது தங்கள் தங்கள் பிரதேசங்களில் வீதிகள் செப்பனிடப்பட்டது பற்றி கூறியிருந்தீர்கள். அது சந்தோசமான விடயம் ஆனால் எமது பிரதேசங்களில் வீதிகள் செப்பனிடப்பட்டிருக்கின்றதா என்பது கேள்விக்குறியான விடயமே. எமது ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதிகள் எமது பிரதேசங்களிலே செப்பனிடப்பட வேண்டி இருக்கின்றது.

அது மாத்திரமல்ல பஸ் போக்குவரத்து சம்மந்தமாகவும் பேசவேண்டியவனாக இருக்கின்றேன். நாவிதனட்வெளி மத்தியமுகாம் 02 என்று சொல்லப்படுகின்ற இடத்தில் பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டது கல்முனைக்குச் செல்வதற்கும் அதேபோன்று அம்பாறைக்குச் செல்வதற்கும் அமைக்கப்பட்டிருந்தது. அவை சீராக இயங்க முடியாத நிலையில் இருக்கின்றது. அதே போன்று திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்திலே அங்கிருந்து கல்முனைக்கும், பொத்துவில்லுக்குமாக பஸ் பேர்க்குவரத்துகள் இடம்பெற்றன இவற்றைச் சீராக இயங்குவதற்கும் இவ்வுயரிய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்றது எதிர்காலத்தில் உரிய முறையில் அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அந்தப் பிதேசங்களும் இந்த நாட்டிலே வளம்மிக்க பிரதேசங்களாக உருவாக்குவது மாத்திரமல்லாமல், அந்த மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments: