கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்தியர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று

றாசிக் நபாயிஸ் 

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்" என வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.ஏ.எல்.எப்.றஹ்மான் தெரிவித்தார். 

"எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையினை சேர்ந்த நபரொருவருக்கும், பொத்துவிலில் இருந்து சிகிச்சை பெற்ற நபரொருவரின் உறவினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது. 

இதனையடுத்து குறித்த நபர்களுடன் தொடர்புகொண்டிருந்த எமது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கு இன்று (10) வியாழக்கிழமை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, எமது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவருக்கும், தாதியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டனர். 

இதனையடுத்து கொரோனா இற்காக சிகிச்சை அளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றாளாராக இனங்காணப்பட்ட வரை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

எமது வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளார்கள் இனங்காணப்பட்டதை அடுத்து புதிதாக நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எமது வைத்தியசாலையின் தொழிநுட்ப குழுவின் கூட்டம் நாளை (11) வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது. 

இதனையடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்க முடியும்" என்றார் 

No comments: