தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணம் தொடர்பில் சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரனின் கருத்து


தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எந்த தொகை தீபாவளி முற்பணமும் அவர்களைக் கடனாளிகளாக்காத வகையில் கழிக்கப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

சம்பள உயர்வு உட்பட பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான எல்லா விதமான கொடுப்பனவுகளும் நிவாரண உதவிகளும் அவர்களுக்கு மேலதிக சுமைகளை ஏற்படுத்துவதாகவே கடந்த காலங்களில் அமைந்துள்ளன.

நிவாரணம் என்ற பெயரில் வழங்கப்பட்ட கடந்த கொரோனா கால உணவுப் பொருட்களுக்கான தொகை ஒரே முறையில் கழிக்கப்பட்டதால் இவர்கள் பாரிய பொருளாதார சிரமங்களுக்கு முகம் கொடுத்தார்கள்.

தற்போதைய நிலையில் குறைந்த வேலை நாட்கள் போதிய ஊதியமின்மை விலைவாசி அதிகரிப்பு வெளியிடங்களில் தொழில் புரியும் குடும்ப உறுப்பினர்களின் வருமான பாதிப்பு போன்றவற்றால் எம் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

வழங்கப்படும் தீபாவளி முற்பணமும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதிக தவணையில் கழிக்கப்படுமானால் இது அவர்களை மேலதிக பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.

நியாயமான முற்பணம் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் ஏதாவது காரணங்களினால் நாடு முடக்கப்படுமானால் அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடைகளின்றி கிடைக்க வழி செய்ய வேண்டுமென்பதிலும் வழங்கப்படும் சகல பொருட்களும் நியாய விலையில் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் இவை அனைத்தையும் விடவும் உற்சவகால ஒன்றுகூடல் மகிழ்ச்சிக்கு பாதகமின்றி தவிர்க்கப்பட வேண்டும் என்பதிலும் சம்பந்தப்பட்ட அனைவரும் அக்கறையோடு செயற்பட வேண்டும்.

நாட்டின் தற்போதைய நிலைமையையும் எதிர்க்காலத்தில் நாம் முகம்கொடுக்க நேரிடவுள்ள பொருளாதார நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு கிடைக்கும் எந்தவிதமான கொடுப்பனவுகளையும் முடிந்தளவு சிக்கனமாக செலவு செய்வதில் நாமும் கவனமெடுக்க வேண்டும்.

சகல நெருக்கடிகளிலும் நம்மை பாதுகாத்துக் கொள்வது நாமாகவே இருக்க வேண்டும்.      


No comments: