அம்பிளாந்துறை – குருக்கள் மடத்திற்கான படகுச் சேவை பாதிப்பு

செ.துஜியந்தன் 


மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசத்திற்கான அம்பிளாந்துறை குருக்கள் மடத்திற்கான இயந்திரப்படகு(பாதை) சேவை நீரில் மூழ்கி செயலிழந்துள்ளதால் அப்பகுதி ஊடாக பயணம் செய்யும் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்வதில் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அம்பிளாந்துறை குருக்கள்மடத்தின் ஊடாக நடைபெற்றுவரும் இவ் பாதைச் சேவையில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்துவருகின்றனர். எழுவான் கரையில் இருந்து படுவான்கரைக்கு வேலைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள், மற்றும் மாணவர்கள், விவசாயிகள்,  வியாபாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் இக்குறுகிய தூரத்தைக் கொண்ட படகுச்சேவை ஊடாகவே தங்களது தேவைகளை நிறைவேற்றிவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்டுவரும் இயந்திரப் படகானது அடிக்கடி பழுதடைந்து விடுவதினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகிவருகின்றனர். குறித்த பாதையின் ஊடாக கடக்கவேண்டிய ஒரு கிலோ மீற்றர் தூரத்தை இங்குள்ளவர்கள் 12 கிலோ மீற்றர் சுற்றிச் சென்றே அடையவேண்டியுள்ளனர். 

இதனால் அரச உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரும்  குறித்த நேரத்திற்கு கடமைகளுக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (09) படகின் இயந்திரப்பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் அதன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளது. 

இதனையடுத்து நீரில் மூழ்கியுள்ள படகினை சரிசெய்வதற்கான முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று திடிரென படகுச் சேவை இடம்பெறாததினால் படகுச் சேவையை நம்பி வருகைதந்த அரச உத்தியொகத்தர்கள், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
கடந்த 30 வருடங்களாக பழுதடைந்த நிலையில் அடிப்பகுதியில் பாரிய ஓட்டைகளுடன், இத்துப்போன நிலையில் சேவையில் ஈடுபடும் குறித்த படகினை மாற்றி அதற்குப் பதிலாக புதிய இயந்திரப்படகினை வழங்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


No comments: