மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் - ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

க.கிஷாந்தன்


"அட்டனில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 10 தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டனர். 80 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் 'நெகடிவ்' என வெளிவந்துள்ளன. இது மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும், மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

புரட்டொப் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (2.10.2020) கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தையும் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் கூறியதாவது,

" இந்த வீதியை வைத்து சிலர் அரசியல் செய்தனர், எனினும், எனது தந்தையின் வேண்டுகோளுக்கமைய வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பணிகள் ஆரம்பித்து நடவடிக்கைகள் இடம்பெறுகையில், நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் வந்த பின்னர் பணிகள் நிறுத்தப்பட்டன.

எனினும், தற்போதைய ஆட்சியின்கீழ் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. பெருந்தோட்டப்பகுதிகளில் 384 கிலோமீற்றர் தூரத்தை புனரமைப்பதற்கு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நாம் நன்றி கூறியாக வேண்டும்.

நுவரெலியா - டன்சின் பாதை மற்றும் கெமினிதன் வீதி ஆகியனவும் நிச்சயம் புனரமைக்கப்படும். வரவு - செலவுத் திட்டத்தின் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறும்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்றும் வழங்கினோம், இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன. பணிகள் தொடரும்.

அட்டனில் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, நகரத்தை மூடுமாறு வர்த்தகர்களிடம் கேட்டோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.  இதனையடுத்து 80 பேரிடம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவுகள் 'நெகடிவ்' அதாவது வைரஸ் தொற்றவில்லை என வந்துள்ளது. இது திருப்தியாக இருக்கின்றது. எனினும், நாம் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும்." - என்றார் ஜீவன் தொண்டமான்.

No comments: