மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பிலான முக்கிய கூட்டம்


நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கான திகதியை தீர்மானிக்க கல்வி அமைச்சு இந்த வாரம் முக்கிய கூட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணம்,குருநாகல் நகரம், குளியாபிட்டிய மற்றும் எஹெலிய கொட பொலிஸ் பகுதிகளுக்கு நவம்பர் 9ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதியை கல்வி அமைச்சு இக்கூட்டத்தில் மறு பரிசீலனை செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சகம்,சுகாதார சேவைகள் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான கொவிட்-19 ஒழிப்பு செயலணி ஆகிவற்றிற்கிடையே இடம்பெறவுள்ள கூட்டத்தை தொடர்ந்து 3ம் தவணைக்கான பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி மறுபரிசீலனை செய்யப்படும்.

கடந்த 4 வாரங்களாக நடைப்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைகளைத் தொடர்ந்து 3ம் தவணைக்காக அரச பாடசாலைகளை நவம்பர் 9ம் திகதி மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் திறக்கப்படுவதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.No comments: