ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வு

வி.சுகிர்தகுமார்  


நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டில் இருந்து இந்நோய் அகல வேண்டும் எனவும் மதஸ்தலங்களில்

பிரார்த்தனை செய்யுமாறும் நாட்டு மக்களும் வேண்டுதலில் ஈடுபடுமாறும் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய திணைக்களமானது கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மதஸ்தலங்களில் வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வு மற்றும் விசேட பூஜை வழிபாடுகளும் அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் நேற்று மாலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை ஆலய உற்சவகால குரு தவத்திரு க.யோகானந்தம் பூசகர் நடாத்தி வைத்தார்.

வழிபாடுகளில் நாட்டில் இருந்து கொரோனா நோய் முற்றாக அகலவேண்டும் எனவும் நாட்டு மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு நல்லாசி வேண்டியும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பக்தர்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் அரசாங்கம் கொரோனா ஒழிப்பு தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

நிறைவாக இறை அருள் ஒன்றே இந்த உலக மக்களை பாதுகாக்கும் எனவும் இதனை உணர்ந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என மட்டுப்படுத்தப்பட்ட சிலர் கலந்து கொண்டனர்.
No comments: