கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டம் - சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழு கலந்துரையாடல்

ஜெயந்திரா ஹபீஷன்


கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (08.11.2020) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ, கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ், கௌரவ இராஜாங்க அமைச்சர்களான மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்கள் (வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்கஅமைச்சு), மாண்புமிகு லசந்த அழகியவண்ண அவர்கள்
(கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்கஅமைச்சு),
மாண்புமிகு தேனுக விதானகமகே அவர்கள்
(கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்கஅமைச்சு), மாண்புமிகு சிசிர ஜயகொடி அவர்கள் (சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலை இராஜாங்கஅமைச்சு), மாண்புமிகு பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் (மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்கஅமைச்சு), மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூ.கேதீஸ்வரன், ஆளுநரின் செயலாளர், பிரதம செயலாளர்,யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக கட்டமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 1000 பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் முதற்கட்டமாக 10 பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 16 பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு 2950 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 02 தேசியப் பாடசாகைள் உள்ள நிலையில் முதல் கட்டத்தில் 02 பாடசாலைகளும் இரண்டாம் கட்டத்தில் 6 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டு 900 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் இராஜாங்க அமைச்சினால் ஜப்பான், கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி இளைஞர் யுவதிகளை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி இளைஞர் யுவதிகளுக்கும் உள்வாங்கப்பட்டு மொழிரீதியான பயிற்சிகளும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகளும் குறித்த இரு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சுகாதார துறைகள் சம்மந்தமான தேவைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதில் கௌரவ அங்கஜன் இராமநாதனால் நெடுந்தீவு வைத்திய மற்றும் சுகாதார பணிமனைக்கு போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும் ஆளணி பற்றாக்குறை தொடர்பிலும் கருத்துக்கள் எடுத்துரைத்தார்.
இது மட்டுமின்றி பல்வகை துறைகள் சார்பாக கலந்துரையாடப்பட்டது.
No comments: