வெளி மாவட்டங்களில் இருந்து மீண்டும் மேல் மாகாணத்திற்கு வருபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை


தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் இருந்து  ஏனைய  மாகாணங்களுக்கு பயணித்த 550 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில்  ஏனைய மாகாணங்களுக்கு பயணித்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் இருந்து மட்டக்களப்பு, நுவரெலியா,தங்கல்லை,  மாத்தறை, யாழ்ப்பாணம், பண்டாரவளை   ஆகிய பகுதிகளுக்கு பயணித்தவர்கள் தொடர்பிலேயே இதுவரை தகவல்கள் கிடைத்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,குறித்த நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த தினத்தில்  மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் நாளைய தினம் மீண்டும்  மேல் மாகாணத்திற்கு திரும்பும் நிலையில் அவர்கள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்படுவதுடன்,  அவர்களை தனிமைத்தலுக்கு உட்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ்தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளமையினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மாத்திரமல்லாது, ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களும்  முகக் கவசங்களை பயன்படுத்துவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: