ஹட்டனில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி - தொடர்பை பேணியவர்கள் தகவல் வழங்க இழுத்தடிப்பு

க.கிஷாந்தன்


ஹட்டன், தும்புருகிரிய பகுதியில் மேலும் இருவருக்கு நேற்று (06.11.2020) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விருவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

தும்புருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கடந்த 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவருடன் தொடர்பைபேணியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். குடும்ப உறுப்பினர்களிடம் 4 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

 

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு வெளியான நிலையில் குறித்த பெண்ணின் கணவனுக்கும், மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண்ணின் கணவர் ஹட்டன் நகரில் மரணவீடொன்றுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தம்மை சுயதனிமைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய தகவல்களை வழங்கவேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

சில பகுதிகளில் மக்கள் தகவல்களை மறைக்கும் விதத்திலும், மாறுபட்ட தகவல்களை வழங்கும் நிலைமையும் காணப்படுகின்றது. அவ்வாறு அல்ல பொறுப்புடனும், பொதுநலன் கருதியும் செயற்படவேண்டிய தருணம் இது. எனவே, கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் மக்கள் வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

ஹட்டன் பகுதிகளில் மட்டும் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை குறிப்பிடதக்கது.
 

No comments: