களுதாவளையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் கரடியனாறு வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பு

துஜியந்தன்                                                                                                                                       

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளைக் கிராமத்தில் 34 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றக்குள்ளாகியுள்ளது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த நபர் இன்று(01) கரடியனாறு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

களுதாவளை நான்காம்பிரிவில் பிரதானவீதியில் வசிக்கும் நபரே கொரோனா தொற்றக்குள்ளாகியுள்ளார். 34 வயதுடைய இவர் கடந்த 24 ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இவருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதுடன் நேற்று 31 ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்நபர் தங்கியிருந்த வீடு அவரோடு தொடர்பு பட்டவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று(01) மண்முனை தென் எருவில்பற்று பிராந்திய சுகாதாரப்பரிவினர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரை வீட்டில் இருந்து மேலதிக சிகிச்சைக்காககரடியனாறு வைத்தியசாலைக்கு  அம்புலன் மூலம் அனுப்பிவைத்துள்ளனர். அத்துடன் அந் நபரோடு நெருங்கிப்பழகிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் தனிமைப்படுத்தலுக்கட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

இன்று (01)களுவாஞ்சிகுடி சுகாதாரப்பணிமனையின் பதில் சுகாதாரப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.நளிரா தலைமையில், பிரதமமேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் உள்ளிட்ட பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டதுடன். பிரதேசத்தில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் பொதுமக்களை அறிவுறுத்தும் வகையில் ஒலி பெருக்கியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பிரதேசத்;தில் சமீபத்தில் தூர இடங்களில் குறிப்பாக  கொழும்பில் இருந்து வருகை தந்துள்ளோர் தாமாக முன்வந்து தங்கள் தகவல்களை வழங்குமாறும் அவ்வாறுள்ளவர்கள் பற்றி  பொதுமக்களை தகவல்கள் வழங்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

களுதாவளையில் கொரோனா தொற்றக்குள்ளான நபர் பயணித்த பஸ் மற்றும் நெருங்கிப்பழகியவர்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாக களுவாஞ்சிகுடி சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.  
No comments: