தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்க நான் தயாரில்லை - மஹிந்த தேசப்பிரிய


தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 12ம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இதனையடுத்து அவருக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவியபோது, “அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தூதுவர் பதவி அல்ல, எந்தவொரு பதவியையும் ஏற்க நான் தயாரில்லை. ஓய்வு காலத்தை மிகவும் அமைதியான முறையில் வாழ விரும்புகின்றேன். எனது ஓய்வை ஏற்கனவே அறிவித்துவிட்டேன்.

நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்தகாலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல் போனது கவலைதான்” என்று குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: