தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதிகளுக்கான முக்கிய அறிவிப்பு


நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதிகளை பாதுகாப்பானதாக கருதிவிட முடியாது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த  தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத்  சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேல் மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு  நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு பாரிய பொறுப்பு  காணப்படுகின்றது.

குறிப்பாக மேல் மாகாணத்தில்  தனிமைப்படுப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட குறித்த பகுதிகளில் பொது மக்கள் நடமாட்டங்களை முற்றாக தவிர்த்து செயற்படுவதன் மூலம் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும்.

எவ்வாறாயினும்  ஊரடங்கு அமுலில்  இல்லாத பகுதிகள் பாதுகாப்பானதாக கருதிவிட முடியாது.எனவே அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள்  தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை பின்பற்றி தமது அன்றாட கடமைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

சமூக ரீதியில் ஒன்று கூடுதல்  தவிர்க்கப்பட வேண்டும். திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். மரண சடங்குகளில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ளமுடியும்.

அனைவரும்  குறித்த விதிமுறைகளை   பின்பற்றி செயற்பட வேண்டும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத்  சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: