நாட்டின் சுகாதார சேவையினால் கொரோனா தொற்றை எளிதில் இல்லாதொழிக்க முடியும் - ஜனாதிபதி


நாட்டின் சுகாதார சேவையினால் கொரோனா தொற்றை எளிதில் இல்லாதொழிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கு பொது மக்களின் ஆதரவு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு  இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வது சுகாதார சேவை மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு  நாம்  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டின் செயற்பாடுகளை முடக்குவது அல்லது எதுவும் செய்யாமல் இருப்பது, அல்லது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி நாட்டை இயல்பாக வைத்திருப்பது என  மூன்று தெரிவுகள் இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, தற்போது எமது நாடு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி நாட்டை இயல்பாக வைத்திருப்பதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், தொற்று பரவாமல் தடுப்பதற்கும் பொது மக்கள் உதவவேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சுமார் 40 நாட்கள் முடக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்தும் தினமும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், இதன் காரணமாக நாட்டை முடக்குவதனால் மாத்திரம் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பி.சி.ஆர். பரிசோதனைக்காக மாத்திரம் அரசாங்கம் ஒரு நாளைக்கு 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவு செய்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் பெரும் தொகை நிதி செலவு செய்யப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இந்த சூழ்நிலையை புரிந்துகொள்வதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதும் மக்களின் கடமை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: