பழம்பெரும் ஆலங்களில் ஒன்றான சங்கமண்கண்டி பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடுகள்

வி.சுகிர்தகுமார்  


பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் திறந்த வெளிக்கோயிலாக தோற்றம் பெற்று அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் மலைக்குன்றுகளின் இடையே அமைந்து இன்றும் இந்துக்களால் போற்றப்படும் அம்பாரை மாவட்டத்தின் பழம்பெரும் ஆலங்களில் ஒன்றான சங்கமண்கண்டி பிள்ளையார் ஆலயத்தில் இன்று கொரோனாவில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும்படி வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றன.

நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டில் இருந்து இந்நோய் அகல வேண்டும் எனவும் மதஸ்தலங்களில்
பிரார்த்தனை செய்யுமாறும் நாட்டு மக்களும் வேண்டுதலில் ஈடுபடுமாறும் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய திணைக்களமானது கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மதஸ்தலங்களில் வழிபாடுகள் நேற்று மாலை இடம்பெற்றன.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சங்கமண்கண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வு மற்றும் விசேட பூஜை வழிபாடுகளும்; சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

ஆலய தலைவர் த.முருகானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை இந்துசமய தர்மாசிரியர், இளம் வைசப்புலவர், ஈசான சிவாச்சாரியார் ஆலய குரு சிவஸ்ரீ பகீரத சுகிர்தசர்மா  நடாத்தி வைத்தார்.

வழிபாடுகளில் நாட்டில் இருந்து கொரோனா நோய் முற்றாக அகலவேண்டும் எனவும் நாட்டு மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு நல்லாசி வேண்டியும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன்; அரசாங்கம் கொரோனா ஒழிப்பு தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அரசாங்கம் கொரோனாவை தடுப்பதற்காக எடுக்கும் முயற்சி தொடர்பில் அரசாங்கத்தையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை  பாராட்டுவதாகவும் ஆலய குரு சிவஸ்ரீ பகீரத சுகிர்தசர்மா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இந்து மதமக்கள் இந்து தர்ம முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஒவ்வொரு மதமும் சொல்லுகின்ற விடயங்களை அவரவர்கள் கடைப்பிடிப்பதுடன் இறை அருள் ஒன்றே இந்த உலக மக்களை பாதுகாக்கும் எனவும் இதனை உணர்ந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்வில் ஆலய நிருவாகத்தினர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட சிலர் கலந்து கொண்டனர்.
No comments: