நுவரெலியா மாவட்ட நீதிமன்றம்,நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோரிக்கை - நுவரெலியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்

க.கிஷாந்தன்


கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக, நுவரெலியாவிலுள்ள நீதிமன்றத்துக்கு வந்துச் சென்றதால், நுவரெலியா மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, நுவரெலியா  சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி காமினி சேனாநாயக்க, நுவரெலியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம், இன்று (4) நடைபெற்றதாகவும் அதில் கலந்துகொண்ட அனைத்து சட்டத்தரணிகளும், நீதிமன்ற நடவடிக்கைகளை 16ஆம் திகதிவரை இடைநிறுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர் என்றும் தெரிவித்தார்.

எனவே, சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைவாக நுவரெலியா மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை 16 ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு, மூன்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கை, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி, 26 ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நுவரெலியாவிலுள்ள நீதிமன்றத்துக்கு வந்துச் சென்றுள்ளார் என்றும் அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள2தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: