அதிவேக நெடுஞ்சாலையின் ஊடான போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை


கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கமைய அதிவேக நெடுஞ்சாலையின் ஊடான போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடான போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நடவடிக்கையினை தீவிரப்படுத்துவதற்காக மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் பகுதியில் விசேட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல் மாகாணம் மாத்திரமின்றி ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்,இன்று அதிகாலை 6 மணிமுதல் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களையும் விசேட சோதனைக்குட்படுத்தவுள்ளதாகவும் காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: