கம்பஹா மாவட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு


கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான காரணி கண்டறியப்படும் வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் இராணுவத்தளபதி இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கம்பஹா மாவட்டத்தின் திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான காரணி கண்டறியப்படும் ஊரடங்கு   நீடிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைய அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பின்பற்றி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன்  திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பகுதிகளில்  விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரினரை மறு அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமெனவும் அறிவுறுத்தல் விடுத்துள்ளோம்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் இன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பு கொண்டவர்கைளை அடையாளம் காணும் நடவடிக்கை  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் குறித்த பெண் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கொரோனா தொற்று சமூகத்தில் பரவலடைவதை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: