அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் நாட்டு மக்களின் வருமான வழி குறைந்துள்ளது - பழனி திகாம்பரம்


அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.நாட்டு மக்களின் வருமான வழி குறைந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவேண்டும் என  தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று நாட்டு மக்கள் தாங்க முடியாத வாழ்க்கைச் சுமையுடன் கஸ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.நாட்டு மக்களின் வருமான வழி குறைந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்கள் அத்தியாவசியபொருட்களின் விலை உயர்வு காரணமான பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அந்த மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் 1000 ரூபா தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பொங்கலுக்கு கிடைக்கும் தீபாவளிக்கு கிடைக்கும் என்றார்கள். தற்போது இந்த மக்களுக்கு பொங்கலும் தீபாவளியும் இல்லாது போகும் நிலை வந்துள்ளது. கம்பனிகள் தோட்டங்களை முறையாக பராமரிப்பதில்லை. அதனால் பல தோட்டங்களில் தேயிலை மலைகள் மூடப்பட்டுள்ளன.

சிறுத்தை உள்ளிட்ட மிருகங்கள் மக்களின் வீடுகளை நோக்கி வருவதை அவதானிக்க முடிகிறது. வேலை நாட்கள் குறைந்துள்ளன. தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ கொழுந்துகுறைந்தாலும் முழுநாள் பெயர் வழங்கப்படுவதில்லை.

கம்பனிகளின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இதற்கு மத்தியில் குளவிகள் நாள்தோரும் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கின்றன. அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கஸ்டத்திற்கு மேல் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இன்று மலையகத்தில் அதிகமாக கனவுகள் காணப்படுகிறது. 1000 ரூபா சம்பள கோரிக்கையும் அதுபோன்ற கனவாகவே இன்றுவரை இருக்கிறது. உடனடியாக இந்த மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட 1000 ரூபா அடிப்படை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் அடுத்த கூட்டு ஒப்பந்ததம் வந்துவிடும். அதிலும் இந்த 1000 ரூபா பற்றியே பேசுவர். கிடைக்குமா என்பது தெரியாது. போதிய அளவு வேலை நாட்கள், போதிய அளவு சம்பளம் இல்லாமல் கஸ்டப்படும் பெருந்தோட்ட மலையக மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மிகவும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.

எனவே இவ்விடயங்களை கருத்திற் கொண்டு அரிசி, கோதுமா மா, சீனி, பருப்பு, தேங்காய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். விலை குறைப்பின் மூலமாவது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

புதிய சட்டங்களை கொண்டு வந்து மக்களை ஆட்சி செய்ய நினைப்பதை விட மக்களின் கஸ்டங்களை போக்கி அவர்களை ஆட்சி செய்யும் முறையை அரசாங்கம் கடைபிடித்தால் நீண்ட பயணம் செல்லலாம்“ எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: