கொரோனா காலத்தில் பொருட்களின் விலை உயர்வோ, தட்டுப்பாடோ ஏற்பட கூடாது - அரசாங்கத்துக்கு அனுஷா வேண்டுகோள்

நீலமேகம் பிரசாந்த்


கொரோனா அச்சுறுத்தலைப் பயன்படுத்தி சந்தையில் பொருட்களின் விலை உயர்வடைவதையோ அல்லது அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதையோ அரசாங்கம் தடுக்க வேண்டுமென சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அச்சத்தால் பொதுமக்கள் குறிப்பாக தோட்ட  தொழிலாளர்கள் உணவுப் பொருட்களை அதிகமாக கொள்வனவு செய்வதில் முனைப்பு காட்டுகிறார்கள்.

கடந்த முறை கொரோனா ஊரடங்கு காலத்திலும் மக்கள் இவ்வாறே அச்சமடைந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தார்கள்.

ஆனால் உணவுப் பொருட்கள் திட்டமிட்டு தட்டுப்பாடாக்கப்பட்ட காரணத்தினாலும் விலை அதிகரிப்பினாலும் மக்கள் அதிகளவு பொருளாதார சுமைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வர்த்தகர்கள் எந்த கட்டுபாடுகளுமின்றி அவரவர்களின் விருப்பத்துக்கு விலைகளைக் கூட்டிக்கொண்டதாவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதே நிலைமை இம்முறையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதனை விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அரசாங்கமும் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

விலை உயர்வுக்கும் அப்பால் தரமற்ற உணவுப் பொருட்களும் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டன.

தோட்ட நிர்வாகங்களின் ஊடாக வழங்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் மொத்தமாக ஒரே தடவையில் பணம் கழிக்கப்பட்டதால் சம்பளமின்றி தொழிலாளர்கள் முகம் கொடுத்த அவலங்கள் இம்முறையும் ஏற்பட்டுவிடக் கூடாது.

இவ்விடயத்தில் தொழிற்சங்கங்கள் நிர்வாகங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

சுய தொழிலில் ஈடுபடுவதற்காக விவசாயக் காணிகளை சுத்தம் செய்ய முயன்ற பலருக்கு எதிராக அப்போது நிர்வாகங்கள் கொடுத்த நெருக்கடிகளையும் நாம் மறந்து விட முடியாது.

எதிர்வரும் காலங்களில் கொரோனா பரவல் அதிகமாகலாம் என்ற அச்சம் நிலவுவதால் இம்முறை கடந்த காலங்களை விடவும் மக்கள் விழிப்பாக இருந்தால் மட்டுமே எம்மை தற்பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆகவே கொரோனா அச்சத்தைவிடவும் விலைவாசி உயர்வு உணவு தட்டுப்பாடு போன்றவற்றால் ஏற்படும் அச்சத்தையும் போக்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இப்போதே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவும் தெரிவித்தார்.

No comments: