அரச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை


பேலியகொடை மீன் சந்தை மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான பலர் பொது போக்குவரத்து சேவைகளில் பயணித்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில்,தங்களின் பேருந்துகளின் இலக்கங்கள் நன்கு தெரியக்கூடிய வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேலியகொடை தொற்றின் பின்னர் பலர் பேருந்தில் பயணித்துள்ளமைக் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் தாங்கள் பயணித்த பேருந்துகள் எவை என்பதை அடையாளப்படுத்துவதற்காக அதன் இலக்கங்களை அவர்களினால் நினைவுப்படுத்திக் கூற முடியாத நிலைமை உள்ளது.

எனவே தான் அரச மற்றம் தனியார் பேருந்து துறையினரிடம் இந்த கோரிக்கையை விடுப்பதாக காவற்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் பயணித்த பேருந்துகளின் இலக்கங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குறித்த பேருந்தில் கொரோனா நோயாளர் பயணித்திருந்தால் அந்தப் பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அறிவித்தல்களை வழங்க தங்களுக்கு இலகுவானதாக இருக்கும் என்றும்  காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


No comments: