கொரோனா அபாயகரமான சூழலில் இருந்து கல்முனையை பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

ஏ.எல்.எம்.ஷினாஸ்    


கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் கல்முனை பிராந்தியம் மிக முக்கியமானதும் அதிக அளவில் சனநெரிசல் கொண்டதுமான ஒரு பிராந்தியமாகும். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவணை வரைக்குமான பிரதேசங்களில் சுகாதார சேவைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த பிராந்தியத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் வைத்தியர்களும் பொலிசாரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதிலும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். குணசிங்கம் சுகுணன் சுட்டிக்காட்டுகின்றார்.

கல்முனைக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது

கொரோனா வைரஸ் தொற்றுநோய் (Covid-19) இலங்கையை அச்சுறுத்திய காலப்பகுதிகளில் கல்முனை பிராந்தியத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. சுகாதார விதிமுறைகள் மற்றும் சுகாதார துறையினரின் இறுக்கமாக பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட்டது எனலாம். எனினும் தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் கொரோனா அலைகள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது.

இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையோடு தொடர்புபட்ட பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய செய்தி பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களிலும் பேலியகொட மீன் சந்தையோடு தொடர்புபட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கல்முனை கரையோரப் பிரதேசமும் மீன் பிடித் தொழிலை பிரதானமாக மேற்கொள்ளும் ஒரு நகரமாகும். கடந்த 2020.10.19 ஆம் திகதி பேலியகொட மீன் சந்தையோடு தொடர்பனவர்கள என அடையாளம் காணப்பட்ட 18 நபர்கள் தனிமைப் படுத்தப்பட்டார்கள். அது பின்னர் 28, 30, 50 என அறியப்பட்டன என்கிறார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர். ஆரம்பத்தில் இவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையின்படி 8 பேருக்கும் பின்னர் 1 நபருக்கும் என 09 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் உறுதிப்படுத்தப்பட்டன. இவர்களில் பொத்துவில் பகுதியில்; -05 பேரும் கல்முனையில் -03 பேருக்கும் ஆரம்பத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் மருதமுனையில் ஒரு நபர் அடையாளம் காணப்பட்டார். தோற்றுக்குள்ளான இவர்களை இவர்களை கரடியனாறு (Covid-19) தொற்று நோயாளர்கள் சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

தொடர்ந்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களோடு நெருங்கிப் பழகிய பலரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இருந்தபோதிலும் கடந்த (2020.10.28) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் மீண்டும் பொத்துவிலில் இரண்டு(2) நபர்களும் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒரு(1) நபரும் கொரோனா தொற்றுக்கு உறுதியாகி உள்ளமே அடையாளம் காணப்பட்டார்கள்.

தற்போது இந்த பகுதியில் 12 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியக்கொட மீன் சந்தையோடு தொடர்பானவர்கள். 

இதேவேளை பேலியகொடை மீன் சந்தையோடு தொடர்பவர்கள் என அறியப்பட்ட 50 நபர்களும் அவர்களுடைய குடும்பத்தினர் என 200 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய பணிப்பாளர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலும் பொதுமக்கள் பாதுகாப்பும்

பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் தற்போது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப் படுகின்றார்கள். இந்த தனிமைப்படுத்தல் ஆனது கொரோனா தொற்று நோய் சமூக மட்டத்தில் ஊடுருவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடாகும்.

இறுதியாக (28) சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியில் நடமாடி உள்ளார் என்ற மனக்கசப்பான உண்மையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த செயற்பாடானது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் பிரதேசத்தில் உருவாக்கி இருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கல்முனை மத்திய பிரதேசம் எனப்படுகின்ற மருதமுனை, கல்முனை நகர், சாய்ந்தமருது போன்ற பிரதேசங்கள் அதிக சன நெரிசல் கொண்ட பிரதேசமாகும். எனவே தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் சட்டத்தை சரியாக பின்பற்ற வேண்டும். அதேநேரம் பொதுமக்கள் தகவல்களை மறைக்காமல் உண்மையை சொல்ல வேண்டும். பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு தங்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப் படவில்லை என்பதால் வழமைபோன்று சமூகத்துக்குள் சென்று வருகிறார்கள் இது தவறாகும்.

சுகாதார பிரிவினர் எதிர்கொள்ளும் சவால்கள்

சுகாதார வைத்திய அதிகாரிகள் வழங்குகின்ற சுகாதார பழக்க வழக்கங்கள் மற்றும் சட்டங்களை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். முக்கியமாக முகக் கவசம் (ஆயசளம) அணிதல், வெளியில் செல்லும் போதும் மீண்டும் வரும் போதும் கைகளை சவர்காரமிட்டு கழுவுவதும், சமூக இடைவெளியை பேணிக்கொள்வது, தேவையில்லாத பயணங்களை குறைப்பது முக்கியமானதாகும்.

தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் வெளியில் செல்வது முக்கியமாக உங்களை மட்டுமல்லாது அனைவரையும் இந்த விடயம் பாதிக்கச் செய்கிறது. கல்முனை பிராந்தியம் கொரோனா தொற்று நோயால் பாரதூரமான ஒரு நிலைமைக்கு சென்று விடுமோ என்ற சந்தேகம் கண்முன்னே தெரிவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். 

முடிந்த அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுகாதார பிரிவினர் முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். சில அரசியல்வாதிகள் தவறுதலாக புரிந்து கொண்டு பாரதூரத்தை அறியாமல் செய்யப்படுவது தமக்கு கவலை அளிக்கிறது என்கிறார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொடர்து தெரிவிக்கையில், சமூக பொறுப்பிலிருந்து சிலர் தவறுவதாக நான் உணர்கிறேன். சுகாதார விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் இந்தப் பிராந்தியம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்றும் தெரிவித்தார்.

பொது நிகழ்வுகளுக்கு தடை

 பொது நிகழ்வுகளுக்காக ஒன்று கூடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள், பௌத்த வணக்கஸ்தலங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள கல்முனை, பொத்துவில், சாய்ந்தமருது பிரதேசங்களில் மிக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பொலிஸாருடன் இணைந்து சுகாதார துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

அரசியல்வாதிகள் சுகாதார துறையினரின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு பணியாற்ற முன்வர வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சுகாதார அனர்த்த சூழலை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நோயிலிருந்து மக்களை காப்பாற்ற நாம் முன்னோக்கி செல்லுகின்ற போது சில தடைகளும் தடங்கல்களும் ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். 

இந்த தடைகள் சுகாதாரத் துறையினருக்கான தடைகள் அல்ல. அவை அப்பாவி பொதுமக்கள் மீது பிரயோகிக்கப்படுகின்ற தடைகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் வைத்திய பணிப்பாளர் டாக்டர்.ஜி.சுகுணன்.

கல்முனையும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமும்

இலங்கையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள பல பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

கல்முனை பிராந்தியத்தில் ஏன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை? விளக்கமளித்தார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
கல்முனையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இன்னும் ஏற்படவில்லை. இதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா தொற்று நோயால் அடையாளங்காணப்பட்ட அனைவரும் ஏற்கனவே தனிமைப் படுத்தப்பட்டவர்கள் ஆவர். 

தனிமைப்படுத்தப் பட்டவர்களிடமிருந்தே பொசிட்டிவ் பெறுபேறு கிடைத்திருக்கின்றது. சமூக மட்டத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை இதனால் நகர முடக்கம் அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தற்போதைய சூழலில் எழவில்லை.

எனினும் தனிமைப்படுத்தலில இருப்பவர்கள் சமூகத்துக்குள் சென்று வருகிறார்கள் என்ற அபாயகரமான தகவல்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றன. இதன் தாக்கத்தை இன்னும் ஓர் இரு வாரங்களில் சமூகத்தில் அறியக்கூடியதாக இருக்கும். இந்த அபாயகரமான நிலை கல்முனை பிராந்தியத்திற்கு ஏற்பட்டுவிடாமல் பாதுகாப்பது பொதுமக்களின் ஒத்துழைப்பில்தான் தங்கியுள்ளது.

குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து இந்த பிரதேசங்களுக்குள் வருவதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது எந்த வாகனங்களில் வந்தாலும் சரி தவிர்ப்பது சிறந்தது. 

அதேபோன்று இந்தப் பிரதேசத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குள் செல்வதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கட்டாய தேவையின் நிமித்தம் வருபவர்கள் எமது சுகாதார பிரிவின் பொது சுகாதார பரிசோதர்களிடம் அணுகி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 

இதற்காக பிரத்தியோகமான தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம் 077 72 58 376 இந்த இலக்கத்திற்கு குறுந்தகவல் அல்லது அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்கினால் எமது சுகாதாரப் பிரிவினரால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார வைத்திய பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments: