இயற்கை அனர்த்தங்கள் எமக்கு அழிவுகளையும் உயிரிழப்புகளையும் தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன-அனுஷா சந்திரசேகரன்


சீரற்ற காலநிலை அனர்த்தத்தால் பலாங்கொடை பின்னவல பகுதியிலுள்ள இரண்டு பெண் தொழிலாளர்கள் பலியாகியுள்ளமை அதிர்ச்சியளிப்பதாக சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மலையகப் பகுதியில் தொடர்ந்துக் கொண்டிருக்கும் சீரற்ற கால நிலையை மக்கள் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய அறிவுறுத்தல்களோ அல்லது ஆபத்தான நேரத்திற்கான நடவடிக்கைகள் பற்றியோ எவருமே அக்கறை கொள்வதில்லை

இயற்கை அனர்த்தங்கள் எமக்கு அழிவுகளையும் உயிரிழப்புகளையும் தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன.

எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்ற பொதுவான அறிவுறுத்தல்கள் மாத்திரமே அதுவும் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படுகின்றனவே தவிர எமது அப்பாவி தொழிலாளர்களை இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து காப்பாற்றுவதற்கும் எதுவித திட்டங்களும் இல்லை அதுபோல் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதற்கான திட்டங்களும் இல்லை.

எமது மக்களின் வாழ்க்கையும் வாழும் உரிமைகளும் பெறுமதியற்றது போலவே இங்கு இடம்பெறும் சோகமான மரணங்களும் கூட பெறுமதியற்று போய் விடுகின்றன.

இன்று அநியாயமாக உயிரிழந்துள்ள பெண்களின் உழைப்பில் தங்கி வாழ்ந்த அனைவரினது எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு மாகாண சபைக்கு தனது வாரிசுகளை தயார்ப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இதுவெல்லாம் அறிக்கை விடுவதற்கான கருவாக மாத்திரமே அமையப் போகிறது.

வழி தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எம் தொழிலாளர்கள் தமது வாழ்வினை விடை தெரியாமலேயே முடித்துக் கொள்ளும் அவலம் முற்றுப் பெற வேண்டும்.

குளவிக் கொட்டுக்கு இலக்காகி மரணமான தொழிலாளர்களின் மரணங்கலெல்லாம் மரண சான்றிதழ்களோடே முற்றுப் பெற்றுவிட்டது.

இவர்களுக்கு எவ்வாறு எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது அல்லது வழங்கப்பட்டதா என்பது கூட தெரியவில்லை. இந்த வரிசையில் இன்று பலாங்கொடை உயிரிழப்பும் பதியப்படுகின்றது.

காலநிலை சீர்கேடு தொடரும் வரை இவ்வாறான அனர்த்தங்களும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும் இதனைக் கட்டுப்படுத்தி எமது அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கமும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் மட்டுமின்றி நிர்வாகங்களும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களையாவது மலையக பிரதிநிதிகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

No comments: