பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது - சுகாதார அமைச்சர்


கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியின் படி நாடாளுமன்றம் ஒரு பொது இடமாக கருதப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது என்பதால் மன்றத்தின் நடவடிக்கைகள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர முடியும் என குறிப்பிட்டார்.

நாடாமன்ற உறுப்பினர்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும், நாடாளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி தாக்கத்தை செலுத்தாது என கூறினார்.

மேலும் வர்த்தமானியின் சில உட்பிரிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தும் என்று சுகாதார அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

பொய்யான கதைகளின் மூலம் பொதுமக்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும் சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டினார்.

கொரோனா கட்டுப்பாடுகளை முன்வைத்து 20வது திருத்தம் தொடர்பான விவாதத்தினை ஒத்திவைக்க எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: