மலையக பெருந்தோட்டத்துறை சுகாதார வசதிகள் தொடர்பில் சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரனின் கருத்து


மலையக பெருந்தோட்டத்துறை சார்ந்த அனைத்து வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளை சுகாதார திணைக்களம் உறுதிசெய்ய வேண்டுமென சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரானா அச்சுறுத்தல் சமூக தொற்றாக மாறி இரண்டாம் கட்ட அலையாக தீவிரமடையுமாயின் நாம் உயிரிழப்புக்களை மட்டுமல்லாது பொருளாதார நெருக்கடிக்கும்  முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

குறிப்பாக அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் இன்றி நெருக்கமான வசிப்பிடங்களில் செறிந்து வாழும் மலையக மக்கள் பாரிய அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். நோய்தொற்று காணப்பட்டால் அவ்வாறானவர்களை சுய தனிமைப்படுத்துவது எமது சமூக கட்டமைப்பில் சிரமமானது.

தொழிலுக்கு கூட்டமாக செல்வது தமது வாழ்வாதார தேவைகளுக்காக நகரங்களுக்கு அதிகளவில் ஒரே நேரத்தில் செல்வது போன்ற தவிர்க்க முடியாத செயற்பாடுகளினால் இந்நோய் பரவுவது தீவிரமாகலாம்.

ஆகவே சுகாதார துறையினர் இவ்விடயத்தில் விஷேட கவனம் கொடுத்து பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களுக்கான சகாதார முறைகளை தெளிவாக அறிவுருத்த வேண்டும்.

சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் கொரானாவிற்கான ஆரம்ப அறிகுறிகளாக அறியப்படுகின்றன. ஆனால் குளிரிலும் மழையிலும் போசாக்கின்மையாலும் நலிவுற்றுள்ள எமது மக்களின் அநேகமானவர்கள் தினமும் இவ்வாறான வருத்தங்களுடனேயே தொழில் புரிந்து வருகின்றனர்.

இத்தகைய அன்றாட நோய்களுக்கு கூட ஒழுங்கான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலுள்ள எம்மவர்களால் கொரானா தொற்றுக்கான அறிகுறிகளை இலகுவில் கண்டறிந்துக் கொள்வது கடினம்.

இது ஆரம்பத்திலேயே கண்டறியப்படாது விட்டால் முழு சமூகத்துக்கமான சவாலாக மாறி விடலாம்.

அத்தோடு மருத்துவ சிகிச்சைகளுக்காகவோ அல்லது விபத்துக்களால் பாதிக்கப்பட்டோ அல்லது குளவிக்கொட்டு காட்டு மிருகங்களினால் தாக்கப்பட்டோ வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அனைவரும் முழுமையாக குணமடைந்த பின்னரே வீடு திரும்புவதையும் வைத்தியசாலைகள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக சிகிச்சைகளில் அவர்களுக்கு உதவவேண்டும்.

ஏதாவது காரணங்களால் முழுமையாக சிகிச்சை முடியாத நிலையில் வீடு திரும்புபவர்கள் மேலதிக சிகிச்சை பெற முடியாமலும் பெற்றுக்கொள்ள தெரியாமலும் நிரந்தர நோயாளியாகி விடுகிறார்கள். இதுவும் ஒரு சமூக சவாலாக மாறிவிடுகிறது.

இவ்விடயங்களில் சுகாதாரதுறை மாத்திரமன்றி இங்கு இயங்கும் அரச சார்பற்ற தொண்டு நிறவனங்களும் இம் மக்களை நம்பி வாழும் தொழிற்சங்கங்களும் முழுமையாக விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


No comments: