வைரஸ் தொற்றிலிருந்து மலையகத்தை பாதுகாக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை - வடிவேல் சுரேஷ் குற்றச்சாட்டு.

 நீலமேகம் பிரசாந்த்


"நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் மக்கள் கொரோனா அச்சத்திற்குள்ளாகியுள்ளாகிய நிலையில் நாட்டின் பல பிரதேசங்களில் பரிசோதனைகள் முன்னாயத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மலையக பெருந்தோட்டப் பகுதியில் அரசாங்கத்தின் மூலம் எதுவித முன்னேற்பாடுகளோ,விழிப்புணர்வு செயற்பாடுகளோ இடம்பெறவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்".என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

09.10.2020 இன்றைய தினம் எதிர்க் கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வேளை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..

கொரோனா நோய் தொடர்பாக மக்களுக்கு விடுக்கின்ற செய்திகள் சில உண்மைக்கு புறம்பானதாக மக்களிடையே சென்றடைவதால் பாடசாலை மாணவர்கள்,கர்ப்பிணி தாய்மார்கள்,தொழில்புரிவோர்கள் மற்றும் விஷேடமாக மலையக வாழ் மக்கள் அனைவரும் உண்மைநிலை அறியாது குழப்பநிலையடைந்துள்ளனர்.ஆகவே ஊடகங்கள் சரியானதும் மக்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததுமான உண்மைத் தகவலை வெளியிட வேண்டும்.

கொரோனா நோய்தொற்றிலிருந்து நாட்டு மக்களை  பாதுகாக்க வேண்டும்.அதிலும் விஷேடமாக நான் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு காரணம் பதுளை,நுவரெலியா,இரத்தினபுரி,கேகாலை போன்ற மாவட்டங்கள் அதிகளவான பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களாகும்.

இப் பகுதிகளில் நோய்த் தொற்று ஏற்படுமாயின் அதனை தடுப்பது மிகவும் சிரமத்திற்குரிய விடயமாகும் ஏனெனில் அப் பிரதேச மக்களின் குடியிருப்புக்கள்,வாழ்வியல் முறைகள்,தொழில் என்பன  ஓர் கூட்டுப் பினைப்பாக அமைந்துள்ளமையாகும்.ஆகவே இதனை கருத்திற் கொண்டு மலையக பெருந்தோட்ட மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களை கவனத்திற் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும்.

அந்தவகையில் சுகாதார அமைச்சு இதனை கவனத்திற் கொண்டு பிரதேசவாரியாகவுள்ள சுகாதார உத்தியோகஸ்தர்கள் மூலமாக மலையக பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு,விழிப்புணர்வு போன்றவற்றை நடைமுறைப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மலையக பெருந்தோட்ட மக்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை இதுவரையிலும் இடம்பெறவில்லை.பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை என பலதரப்பட்ட சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். 

எம் மக்கள்.பிரதி சுகாதார அமைச்சாராக நான் கடமையாற்றிய காலப்பகுதியில் என்னுடைய முயற்சியின் பயனாக அனைத்து பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கும் MBBS தர வைத்தியர்களை நியமித்து அவர்களுக்கான விடுதிகளையும் அமைத்து வழங்கியிருந்தேன்.அதன் பின்னர் இது வரையிலும் எதுவித நியமனங்களோ,சேவைகளோ பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு கிடைக்கப் பெறவில்லை என்பது பெருந்தோட்ட மக்களின் துர்ப்பாக்கிய நிலையேயாகும்.

பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பளப் பிரச்சினை தான் பகற்கனவாகவுள்ள போதிலும் மக்களின் அத்தியாவசிய சுகாதார தேவைகளை கூட இந்த அரசாங்கம் பூர்த்தி செய்ய தவறியுள்ளமை மிகவும் வேதனைக்குறிய விடயமாகும்.1000 ரூபா சம்பளத்தை வளங்குவதற்கு அரசாங்கத்தினால் கம்பனிகளுக்கு விதித்த 14 நாட்கள் என்ற காலக்கேடு முடிந்துள்ள நிலையிலும் கூட இன்னும் எதுவித பலனும் கிடைக்கப் பெறவில்லை.

எது எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பான தோட்டத் தொழிலாளர்கள்  அட்டைக்கடிக்கும்,சிறுத்தைப் புலி மற்றும் குளவிக் கொட்டுக்கு  நாளுக்கு நாள்  பலியாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் இவ்வாறான கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான சுகாதார வழிமுறைகளை முறையாக செயற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

No comments: