நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் மினுவாங்கொடை திவுலுப்பிட்டிய கொத்தணியில் 87 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அவர்களில் 23 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டதுடன்,ஏனைய 64 பேரும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2162 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை,கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3440 ஆக காணப்படுகிறது.

இதேவேளை,புறக்கோட்டையில் நான்காம் குறுக்குத் தெருவில் மொத்த வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோய் நிலைமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அதன் பின்னர் அவருடன் தொடர்புடையவர்களுக்கு கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அந்த வர்த்தக நிலையத்தின் 4 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக வர்த்தக நிலையத்தின் 16 பணியாளர்களும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக அந்த சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் உள்ள 4 வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பைப் பேணிய 40 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவை தொடர்பான பெறுபேறுகள் இன்றைய தினம் கிடைக்கப்பெற்றவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: