வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்-பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு


கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  பொரளை பகுதியில் உள்ள  தொடர்மாடி குடியிருப்பு தொகுதியொன்றில் இருந்து இன்று நண்பகல்  பொரளை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சுகாதார தரப்பினர் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் சிகிச்சைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த  26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில்   இன்று அதிகாலை தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொரளை  கிரேண்ட்பாஸ் மற்றும் கொஸ்கம  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: