தோட்டத் தொழிலாளி ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி காலால் உதைத்து வெளியே தள்ளிய தோட்டத்துரைக்கெதிராக தோட்ட மக்கள் போர்க்கொடி

நீலமேகம் பிரசாந்த்


நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட டெஸ்போட் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சகாதேவனை எனும் தொழிலாளியை தோட்ட துரை தகாத வார்த்தையால் பேசியதால் குறித்த தோட்டத்தொழிலாளர்கள் தோட்டத்துரைக்கெதிராக போராட்டத்தில் குதித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் சகாதேவன்  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உதவி தோட்ட முகாமையாளர் விடுதிக்கு காவலாளியாக மாற்றப்பட்டுள்ளார்.

விடுதிக்கு வேலைக்கு சென்றப்பிறகு  தோட்ட உதவி முகாமையாளர் இரவில் காவல் வேலையையும் பகலில் பங்களா சார்ந்த தோட்ட வேலைகளிலும் ஈடுபடுத்தி ஓய்வற்ற வகையில் தொந்தரவு கொடுத்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக தனது வீட்டில் எந்த ஒரு தேவைக்கும் செல்ல முடியாதவாறு கால நேரமின்றி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார். அதனை தொடர்ந்து குறித்த தொழிலாளிக்கும் தோட்ட உதவி முகாமையாளருக்கும் வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. 

இதனை அறிந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நானுஓயா மாவட்ட மாநில பிரதிநிதி பத்மநாதன் அவர்கள் தோட்ட முகாமையாளருக்கு இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன் பிரகாரம் சுமுகமான தீர்வை தருவதாக தோட்ட முகாமையாளர் கூறி காலம் கடத்தி வந்த நிலையில் குறிப்பிட்ட தொழிலாளியை காவல் வேலை மற்றும் தோட்ட வேலை என சுழற்சி முறையில் ஈடுபடுத்தலாம் எனக்கூறி நேற்று புதன்கிழமை இரவு விடுதியில் காவல் வேலைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார். 

அதன் பிரகாரம் நேற்று இரவு குறிப்பிட்ட பங்களா காவல் தொழிலுக்காக சென்று இருந்த பொழுது உதவி முகாமையாளர் தனது பங்களாவுக்கு அழைத்து ஜன்னல் திரைகளை போடுமாறு கூறியுள்ளார்.

மேற்படி தொழிலாளி ஜன்னல் திரைகளை போட்டு முடித்தவுடன் குறித்த தொழிலாளியை தோட்ட உதவி முகாமையாளர் சகோதர மொழியில் " தமுசே மே வரெங் மேக மகே பங்களாவ உம்ப கோமத ஆவே" அதாவது அடேய் இது என்னுடைய பங்களா நீ எப்படி வரமுடியும் என தகாத முறையில் கூறி அவரை தலையில் அடித்து பின்னால் காலால் உதைத்து குறித்த தொழிலாளியை தாக்கி வெளியே தள்ளியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த சம்பவத்தை அறிந்த நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமாக்கு அறிவித்ததை அடுத்து அவர்களின் ஆலோசனைக்கு அமைய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு நேரில் சென்று குறித்த சம்பவம் தொடர்பாக தொழிலாளர்களுடனும் தோட்ட நிர்வாகத்தினருடனும் நுவரெலியா பிரதேச சபை தலைவர் அவர்கள் கலந்துரையாடி நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாக கூறினார். 

தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

பின்பு இன்று பகல் ரதல்ல விடுதியில் தோட்ட நிர்வாகத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா பிரதான காரியாலய இயக்குனர் லோகதாஸ் அவர்கள் மற்றும் மாவட்ட மாநில பிரதிநிதி பத்மநாதன் மற்றும் தோட்டக் கமிட்டி தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் பிரகாரம் சகாதேவன் என்ற தொழிலாளியை தொடர்ச்சியாக மலை காவலாளியாக வேலைக்கு போடுவதாகவும் மலையில் வேலை செய்யும் ஒருவரை விடுதி காவலாளியாக அமர்த்தி அவர் மாலை 6 மணிக்கு சென்று அதிகாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும் என தீர்வு எட்டப்பட்டது. 

மேலும் சகாதேவன் என்ற தொழிலாளிக்கு இதுவரைகாலமும் வேலை செய்ததன் நிமித்தம் அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


No comments: