அரசியலுக்கு அப்பாற்பட்டு கொரோனா தொற்றிலிருந்து மலையக மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-அனுஷா சந்திரசேகரன்


கொரோன பரவல் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் அறிவிப்புகளுக்கும் அறிக்கைகளுக்கும் அப்பால் தேவையான நடவடிக்கைகளுக்கும் மலையக அமைப்புகள் தயாராக வேண்டுமென்று சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் சில வேலைகளில் இன்னொரு தீவிர கூட்டத்துக்கு செல்லுமானால் அதிலிருந்து எமது மக்களை எப்படி மீட்கப்போகிறோம் என்பது பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார சிக்கல்களில் எவ்வாறு உதவப்போகிறோம் என்பது பற்றியும் நாம் இப்போதே திட்டமிட வேண்டும்.

நாம் அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளோமா அல்லது அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறப்போகிறோமா என்பதற்கும் அப்பால் மக்கள் பிரதிநிதிகள் என்ற நிலையை உணர்ந்து மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

அதே போல் மக்களுக்கு சேவை செய்வோம் என்று கூறி தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாதவர்களும் கூட இவ்விடயத்தில் ஒதுங்கியிருக்காமல் நாம் தேர்தல் காலத்தில் சந்தித்த அதே மக்களுக்காக சேவை செய்ய தயாராக வேண்டும்.

கடந்த முறைப்போல் தங்களைமட்டும் காப்பாற்றிக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்ததைப் போலவோ அல்லது பெயருக்காக ஓரிரு இடங்களில் நிவாரணப் பொருட்களை வழங்கியது போலவோ அல்லாமல் தமது பாதுகாப்பை போல மக்களின் பாதுகாப்பையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஏனைய பிரதேசங்களை விடவும் மலையகப் பெருந்தோட்டப்புறங்களில் கொரோனா பரவுவதற்கான காரணிகள் அதிகமாக உள்ளன. போதிய சுகாதார வசதியோ தெளிவோ இல்லாத நிலை நெருக்கமான குடியிருப்பு தொழிலுக்காகவும் பொழுது போக்குக்காகவும் வசிப்பிட தேவைக்காகவும் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி வாழும் நிலைஇ இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி இழந்த வயோதிபர்கள் என்று எமது சமூகம் பல முனைகளிலும் பலவீனமாகவே உள்ளதை நாம் உதாசீனப்படுத்தி விடக்கூடாது.

எமது பிரதேசத்திலுள்ள காலநிலை காரணமாக எமக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளும் கொரோனாவுக்கான நோய் அறிகுறிகளும் எவ்வாறு வேறுபட்டவை என்பதனை கூட அறிந்து கொள்ள முடியாத நிலையிலேயே எமது மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்

ஆகவே கடந்த காலங்களில் போல மயான அமைதியாக இருந்து நாம் எதனையும் சாதிக்க முடியாது என்பதனை உணர்ந்து அல்லது வரவிருக்கும் மாகாணசபை தேர்தலில் இம் மக்களின் வாக்குகள் தேவை என்பதனையாவது உணர்ந்து மலையக பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்இ  மேலும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


No comments: