கொட்டகலையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை - விழிப்பாகவே இருப்போம் - தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு

க.கிஷாந்தன்


"கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்றபோதிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்." - என்று கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், அங்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் தவிசாளரிடம் வினவியபோது அவர் கூறியதாவது,

"கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 10 வட்டாரங்கள் உள்ளன, 5 குடும்பங்கள் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டன. அக்குடும்ப உறுப்பினர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவு எமக்கு கிடைத்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த எவருக்கும் கொவிட் - 19 வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதியானது.

எனவே, இப்பகுதியில் வைரஸ் பரவும் என வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன், அச்சம் கொள்ள வேண்டாம் என்பது, வழமைபோல் சுதந்திரமாக செயற்படுங்கள் என்பது பொருள் அல்ல,  முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி செயற்படுமாறு கோருகின்றேன்.

கொட்டகலை பிரதேசத்தில் விளையாட்டு நிகழ்வுகளை இடைநிறுத்தியுள்ளோம். எவராவது திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தினால் அது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையுடனேயே (25 -50) நடைபெற வேண்டும்.

அதேவேளை, வெளி மாவட்டங்களில் இருந்து எவராவது வந்தால் அது தொடர்பில் பிரதேச சபைக்கு தகவல் வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன், ஏனெனில் வைரஸ் என்பது கண்ணுக்கு தெரியாது, ஆனால் ஏதோவொரு விதத்தில் பரவக்கூடும். எனவேதான் பொது மக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.


No comments: