நேற்றைய தினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் பற்றிய தகவல்


நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3513 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 111 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பதிவான சம்பவங்களுக்கு மேலதிகமாக, வௌிநாடுகளிலிருந்து திரும்பிய 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டியவில் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 101 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை உடனடியாக IDH உள்ளிட்ட வைத்தியசாலைகளில் அனுமதித்ததாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் தொழில் புரியும் சுமார் 2,000 பேரை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அவர்களில் 495 பேர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு வௌியே வசிப்பதாகவும் அவர்கள் அனைவரையும் இன்றைய தினத்திற்குள் கண்காணிப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,000 இற்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments: