ஊரடங்கு தொடர்பில் முக்கிய அறிவுறுத்தல்


மினுவாங்கொட மற்றும் திவுலுப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்கு கொரோனா தொற்றுக் குறித்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திவுலபிடிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், 39 வயதுடைய குறித்த பெண் தற்போது தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

குறித்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நோய் குணமடைந்த நிலையில் வீட்டுக்கு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் 15 ஊழியர்கள் மற்றும் குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அவர்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இவருடன் தொடர்பை பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும், சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறும் சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

No comments: