வாழ்வா சாவா என்ற போரட்டத்தின் மத்தியில் தெருவோரம் வாழ்ந்து வரும் குடும்பம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


மலையக   பெருந்தோட்டபகுதிகளில் தனிவீட்டுத்திட்டங்கள் பல பகுதிகளில் 
முன்னெடுத்து மக்கள் பாவனைகளுக்கு கையளிக்கப்பட்டு வந்தாலும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இன்று வீடுகள் இன்றி தெருவோரங்களில் வாழ்ந்து வரும் அவல நிலை இன்னும் மாறவில்லை. 

எமது நாட்டில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றாலும் மலையக மக்களின் வாழ்வியல் மாற்றங்கள்
இன்னும் கேள்விகுறியாகவே காணப்படுகிறது.

அந்தவகையில் இருக்க இருப்பிடம் இன்றி வாழ ஒரு வீடு இன்றி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்வா சாவா என்ற போராட்டத்தின் மத்தியில் மூன்று பிள்ளைகளுடன் பொகவந்தலாவ லொய்னோன் லின்போட் தோட்டத்தில் உள்ள ஆலயத்திற்கு அருகாமையில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பம் தான் இந்த அந்தோனிமுத்து பெனடிக் என்பவருடைய குடும்பம்.

லொய்னோன் லின்போட் தோட்டப்பகுதியில் பிறந்த வளர்ந்த அந்தோனிமுத்து பெனடிக் திருமணம் முடித்து சிலகாலம் அவருடைய சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தபோதிலும் குருகிய காலம் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்திலும் வசித்து வந்துள்ளார். 

சில மாதங்கள் கடந்து தனது பூர்வீக இருப்பிடமான லொய்னோன் லின்போட் தோட்டப்பகுதிக்கு தனது மனைவி மூன்று பிள்ளைகளுடன் வந்த போது அவருடைய பூர்வீக தோட்டத்தில் அவருக்கென இருந்த ஒரே குடியிருப்பும்  வேறு நபருக்கு அவருடைய சகோதரரினால்
விற்கபட்டுள்ளது.

இது தொடர்பில் நான் தோட்ட நிர்வாகத்திடம் சென்று கோரினேன். அதற்கு நடவடிக்கையினையும் தோட்டநிர்வாகம் எனக்கு வழங்கவில்லை ஆகையால் வாழ வீடு இன்றி எனது மூன்று பிள்ளைகள் எனது மனைவியோடு தோட்டத்தில் உள்ள ஆலயத்திற்கு அருகாமையில் வீதியோரம் கடந்த மூன்று மாதங்களாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். 

அந்தோனிமுத்து பெனடிக் என்பவருக்கும் ஆர்ஜீனண் கனகேஸ்வரிக்கும் பிறந்து மூன்று குழந்தைகளுள் ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்ற போதிலும் இந்த மூன்று பிள்ளைகளும் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் முதல் மகன் தரம் 08லும், மற்றைய இரண்டு பெண் பிள்ளைகளும் தரம் 03லும்,தரம் 01லும் கல்வி கற்றுவருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு நிரந்தர வீடு இல்லாமையினால் மூன்று பிள்ளைகளையும் குறித்த தோட்ட ஆலயத்திற்கு றஅருகாமையில் தங்கவைத்து விட்டு நாளாந்தம் கூலி வேலைக்கு சென்று தமது வாழ்வினை கழித்து வருகின்றனர். 

அண்மையில் பெய்த கொட்டும் மழை மற்றும் கடும் காற்று வீசிய போதிலும் இவர்கள் பல துன்பங்களை அனுபவித்து வந்ததாக லின்போட் தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் படும் துயரதத்தினை கருத்தில் கொண்டு தோட்டமக்கள் அனைவரும் மனு
ஒன்றை தயாரித்து கையொப்பம்மிட்டு இந்த குடும்பத்தினருக்கு வாழ்வதற்கு
வீடு ஒன்றினை வழங்கப்பட வேண்டுமென கோரி தோட்ட நிர்வாகத்திடம் மனு ஒன்றினை வழங்கியுள்ள போதிலும் தோட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தோட்ட நிர்வாகத்திடம் நியாயமான முடிவு கிடைக்காமையினால் இவர்கள் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்தனர். 

இருந்த போதிலும் இதுவரை எமது வீட்டு பிரச்சினைக்கு எவ்வித  தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை. ஆகவே எமக்கு வாழ்வதற்கு ஒரு வீட்டினை பெற்றுதர இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்,அமைச்சர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

எது எவ்வாறாக இருப்பினும் தோட்டநிர்வாகம் ஒரு வீட்டினை அமைக்க காணி ஒன்றினை வழங்கினால் எமது தோட்டத்தில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து இந்த குடும்பத்தாருக்கு வீடு ஒன்றினை அமைத்து கொடுக்க எம்மால் முடியுமென
இவர்கள் தெரிவிக்கின்றனர்.No comments: