தீபாவளி பண்டிகைக்கு அங்காடி வியாபாரத்திற்கு ஹட்டன் டிக்கோயா நகரசபை தடை - தீபாவளி தினத்தில் ஊரடங்கு அமுல்படுத்தவும் கோரிக்கை

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


தீபாவளி பண்டிகைக்கு ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட எல்லைப்பகுதியில் அங்காடி வியாபாரம் செய்ய தடை செய்வதுடன் வெளி பிரதேச வியாபாரிகள்  நகர சபை எல்லைப்பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை என ஹட்டன் டிக்கோயா நகரசபை மாதாந்தக் கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நகரசபைத் தலைவர் சடையன் பாலச்சந்திரன் தலைமையில் இன்று 23/10. நடைபெற்ற மாதாந்த சபையமர்வின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளதாக சபைத்தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். 

ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து நகர மக்களையும் நகருக்கு வருவோரையும் பாதுகாக்க வேண்டும்.

ஆகவே தீபாவளி பண்டிகைக்கு வருடாந்தம் அங்காடி வியாபாரம் செய்ய அனுமதி வழங்காது, நகர வர்த்தக நிலையங்களிலும் கொவிட் சுகாதார நடைமுறையைப் பேணி வர்த்தக நடடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதே போல தீபாவளி பண்டிக்கைக்கு கொழும்பு உள்ளிட்ட வெளி மாட்டங்களிலிருந்து வருகைத்தரும் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகள் நகருக்கு வருவதை கட்டுப்படுத்தும் வகையில் தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 14,15 ஆம் திகதிகளில்  இரு தினங்களுக்கு ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டி கோரிக்கை மனுவொன்றை இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கையளிக்கவும் சபையில்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பேலியகொடை மீன் சந்தையில் வேலை செய்தவர்களுக்கு  கொரோன தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து பேலியகொடை மீன் சந்தையில் மீன் கொள்வனவு  செய்து ஹட்டன் டிக்கோயா நகர பகுதியில் வியாபாரம் செய்வதாக பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்ட வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த மீன் விற்பனை நிலைய ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்  மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்பட்டதாக சடையன் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

No comments: