ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்களே - பிரதமரின் வாழ்த்துச் செய்தி


ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்களே என்றும் அவர்களை ஆரோக்கியமான செயற்திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கும் அவர்கள் முறையாக வழிநடத்தப்படுகின்றார்களா என்பதை உறுதிசெய்வதும் எமது பொறுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,” சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்த செய்தியை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறுவர்களே ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம்.

அந்தவகையில், அவர்களை ஆரோக்கியமான செயற்திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கு எமது சிறுவர்கள் முறையாக வழிநடத்தப்படுகின்றார்கள் என்பதை உறுதிசெய்வது எமது பொறுப்பாகும்.

இந்த முயற்சியில் எங்களது பல தலைமுறைகளுக்கு மறுக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் அமைதியான தேசத்தைப் பாதுகாப்பதே முதன்மையானது.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தமது அடிப்படை உரிமைகளை பெற உரித்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் நாம் இப்போது பணியாற்ற வேண்டும்.

அனைத்து குழந்தைகளும் வீட்டிலும் பாடசாலையிலும் பாதுகாப்பாக காணப்படுவதனையும், சரியான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்துக்கான அணுகல் மற்றும் இலவச கல்விக்கான உரிமையை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

ஒரு நாடு என்ற வகையில், ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆணுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வழங்குவதன் மூலம், நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்க முடியும்.

ஒரு குழந்தையை ஒரு செயற்திறன் மிக்க நபராக மாற்றுவது சமூகத்தின் கூட்டுப் பணியாகும். இது குடும்பம் மற்றும் அரசாங்கத்தினது மட்டுமன்றி, பாடசாலை, ஆசிரியர்கள், மத வழிகாட்டிகள் மற்றும் சமூகங்கத்தையும் உள்ளடக்கியுள்ளது.

எமது குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் வளமான தேசத்தை உருவாக்குவதற்கு இலங்கையின் அனைத்து சமூகங்களும் பகிர்ந்து கொள்ளும் பரஸ்பர கலாச்சாரம், சமூக மற்றும் தார்மீக விழுமியங்கள் என்பனவும் கைக்கொடுக்கும் என நான் நம்புகின்றேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: