நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவித்தல்


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் மக்கள் அனைவரும்  அரசாங்கத்தால் வழங்கப்படும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 அச்சுறுத்தல் உலகெங்கும் பரவிக்கொண்டிருந்த வேளையில், ஒரு பலமான தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதனை தோற்கடித்து வெற்றிகண்டோம்.

தற்போது , COVID-19 மீண்டும் நம் நாட்டிற்குள் வந்துள்ளது.

முன்னரை போலவே, எமது சுகாதார, பாதுகாப்பு மற்றும் பிற சேவைத்துறைகளை சேர்ந்தவர்கள் இந்த அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறு குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல் மக்கள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன்படி செயற்படுமாறு கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: