உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு
20வது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பரிசீலனை மீதான தீர்மானம் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
20வது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை, 4ஆவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குறித்த மனுக்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்படி, புவனேக அலுவிகாரே, சிசிரி டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்களும் குறித்த குழுவில் அங்கம் வகித்தனர்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு திருத்த சட்டவரைபு, நீதி அமைச்சர் அலி சப்ரியினால் கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதன்படி குறித்த சட்டவரைபுக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்ய, 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், சட்டத்தரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதன்படி, அனைத்து மனுக்களினதும் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன், 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த தமது கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி சில இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நிமல் சிறிபால டி சில்வா, காமினி லொக்குகே, ஜீ.எல். பீரிஸ், சாகர காரியவசம், ஓமாரே கஸ்ஸப தேரர், எம். தயாரத்ன, WMD வீரதிலக மற்றும் PGB அபேரத்ன உள்ளிட்டோர் குறித்த இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், 20வது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை, கடந்த செப்டெம்பர் 29ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதன் அடிப்படையிலேயே, 20வது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: