நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையை நிறுவுவதற்கு தீர்மானம் - பிரதமர்


சர்வதேச சிறுவர் தினம் மற்றும் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு வைத்தியசாலையின் ஒன்பது மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கட்டடத் திறப்புவிழா நேற்று இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது,நாட்டின், அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையை நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மற்றும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் வைத்தியசாலைகள், எதிர்காலத்தில் மாகாணத்திற்கொரு வைத்தியசாலை என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தெரிவிக்கையில், “நாட்டில் இரண்டு சிறுவர் வைத்தியசாலைகளே காணப்படுகின்றன. அவை கொழும்பிலும் கண்டியிலுமே உள்ளன.

சிறுவர் வைத்தியசாலைகள் குறைந்தபட்சம் மாகாணத்திற்கு ஒன்றாவது உருவாக்கப்பட வேண்டும் என எமது அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. எது எவ்வாறாயினும் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானதாகும். இந்தக் குழந்தைகள்தான் எதிர்காலத்தில் எமது நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எமது பொறுப்பாகும்.

இதேவேளை, அனைத்து பிள்ளைகளுக்கும் ஒரு கோப்பை கஞ்சி போன்ற போசாக்கான பானமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கல்வி அமைச்சருக்கு முன்மொழிவொன்றை முன்வைக்கிறோம். எமது ஆட்சிக் காலத்தில் நாம் குழந்தைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி செயற்படுவதற்குத் தயாராக உள்ளோம் என்பதை இத்தருணத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

மேலும், றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கைகளை முறையாக பராமரித்துச் செல்வது தொடர்பாக நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தருணத்தில் அவர்களின் சிறப்பான சேவையை நான் பாராட்டுகிறேன். எதிர்கால தலைமுறையைப் பாதுகாக்கும் அற்புத பணியே ஆற்றப்பட்டு வருகின்றது” என குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: