கொரோனா அச்சமும் சீரற்ற காலநிலையும் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் சவாலாக மாறியுள்ளது-அனுஷா சந்திரசேகரன்


கொரோனா அச்சத்துக்கு மேலதிகமாக சீரற்ற காலநிலையும் பெருந்தோட்ட துறை மக்களின் வாழ்க்கையில் சவாலாக மாறியுள்ளது என்று சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கடுமையான மழை, மண்சரிவு, காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் பற்றி விழிப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

ஆனால் ஒழுகும் கூரை தற்காலிக குடிசை பாதுகாப்பு இல்லாத குடியிருப்பு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் எமது மக்கள் எப்படி தங்களை இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி எதுவித விளக்கங்களுமே தரப்படுவதில்லை.

மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்பு மாத்திரமே வெளியிடப்படுகிறது. எங்கு எப்படி எவ்வளவு காலத்துக்கு மாற்று இடங்களில் தங்கியிருப்பது என்று எவரிடமுமே விளக்கங்களோ திட்டங்களோ இல்லை.

ஏற்கனவே இவ்வாறான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பலர் வருடக்கணக்காக தற்காலிக கொட்டகைகளிலேயே வசித்து வருகிறார்கள்.

தீவிபத்து அல்லது வேறு அனர்த்தங்கள் ஏற்படும் போது மாத்திரம் அவர்களுக்கு சிறு சிறு நிவாரணம் வழங்குவதோடு மக்கள் பிரதிநிதிகள் எனப்படுபவர்களும் தங்களின் கடமைகளை முடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அதன் பின்னர் இம்மக்களின் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பது பற்றி எதுவிதுமான அக்கறையும் நடவடிக்கையும் எடுக்கப்படுவதே இல்லை.

மக்களின் நலனை பற்றி கடந்த காலங்களில் தேர்தல் மேடை பிரசாரங்களில் ஒலித்ததுடன் சரி அதன் பின்னர் இந்த மக்களை திரும்பிப் பார்ப்பார் யாருமில்லை.

எங்களை தெரிவு செய்தால்தான் உங்கள் வாழ்வு ஒளிமயமாகும் என்றவர்கள் எங்கு ஒளிந்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஆகவே இனியாவது மக்களும் ஓரளவாவது நிலைமைகளை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் நலனுக்காக சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு நானும் என்னால் முடிந்தவரையில் அழுத்தங்களை வழங்கிக்கொண்டிருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.     

No comments: